கருணாநிதி சொந்தப் பணத்தில் தமுமுகவுக்கு வாங்கிக் கொடுத்த 2 ஆம்புலன்ஸ்கள்

16

திமுக தலைவர் மு.கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கிக் கொடுத்ததை நினைவு கூர்கிறார் தமுமுகவின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா.

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குவதற்கு முன்னரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலம் ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து தர மக்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தியது. இன்று தமிழகம் முழுவதும் தமுமுக சார்பாக 151 ஆம்புலன்ஸ் அவசர கால ஊர்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஆண்டொண்டுறுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் அதன் மருத்துவ அணி சார்பாக அவசர தேவைகளுக்காக சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட் ரத்ததானம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்காக திமுக தலைவர் தமிழக முதல்வராக இருந்த போது தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது குறித்து தமுமுகவின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா நமது செய்தியாளரிடம் கூறுகையில், ”முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியதற்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 24.11.2007 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது.

இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ”தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமுதாயத்திலே நலிந்த பிரிவினருக்கு, ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கு உதவுகின்ற கருணை இல்லங்களைப் போல, அன்பு இல்லங்களைப் போல செயல்பட்டு வருகிறது.

மக்கள் சேவைக்காக காத்திருக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்கள்.

ஆம்புலன்ஸ் அதிகமாகப் பயன்படுகின்ற அளவிற்கு நோய்நொடிகள், நலிவுகள் வரவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் வந்த நலிவுகளைப் போக்க ஆம்புலன்ஸ் வண்டிகள் தேவை. அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளின் மூலம் தமுமுக உதவிகளை செய்து வருகிறது. தமுமுகவிற்கு என்னுடைய சொந்த பணத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன் என அறிவித்தார்.

அறிவித்தது போல இரண்டு ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்குரிய விலை விவரத்தையும் தர வேண்டும் எனக் கேட்டிருந்து கடந்த 12.12.2007 அன்று தமுமுக தலைவரான என்னையும்,பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோரை இல்லத்திற்கு அழைத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்குரிய ரூ.18 லட்சத்து 68 ஆயிரத்து 796க்கான காசோலையை கலைஞர் தந்தார்.

கலைஞர் கருணாநிதி வழங்கிய இரண்டு ஆம்புலன்ஸ்கள் தற்போது சென்னை வட மரைக்காயர் தெருவில் இயங்கம் தமுமுக தலைமையகத்திலிருந்து ஒரு ஆம்புலன்ஸும், கிழக்கு கடற்கரை சாலையில் மற்றொரு ஆம்புலன்ஸும் செயல்பட்டு வருகிறது” என்றார் ஜவாஹிருல்லா.

LEAVE A REPLY