கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை

11
கருணாநிதி

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும், அவரது நிலை குறித்து தெளிவாக அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்குப் பிறகே கூற முடியும் என்று மருத்துவமனை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ள நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ”கருணாநிதியின் உடல் நிலை கடந்த சிலமணி நேரங்களாக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்ச மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவருடைய உடல் உறுப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY