புதிய வரலாறு படைக்குமா குரோஷியா?- இறுதிப் போட்டியில் பிரான்ஸூடன் இன்று மோதல்

16
குரோஷியா

கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் இன்று மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் மோதுகின்றன. புதிய சாம்பியனா அல்லது 1998-ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபிபாவின் 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி மாஸ்கோவில் கோலாகமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்தக் கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக கருதப்பட்ட அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் வெளியேறிய நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிரான்ஸ் அணி கடந்த 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2006-ம் ஆண்டு இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் அதிக இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியாக கருதப்படும் பிரான்ஸ் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் தொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 19 வயதான கிளியான் பாப்பே, மற்றும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் பெஞ்சமின் பவார்டு, லூக்காஸ் ஹெர்னாண்டஸ் ஆகியோர் சிறந்த பங்களிப்பு செய்து வருகின்றனர். கிளியான் பாப்பே நாக் அவுட் சுற்றில்அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்து அசத்தியிருந்தார்.

அதேவேளையில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெனால்டி கிக்கில் தலா ஒரு கோல் அடித்த கிரீஸ்மான், உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓபன் பிளேவில் கோல் அடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்தத் தொடரில் இரு கோல்கள் அடிக்கவும் உதவியிருந்தார். ஆனால் கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆடடத்தில் கிரீஸ்மேன் கோல் அடிக்கவில்லை. எனினும் அவர் களத்தில் துடிப்பாக செயயல்படக்கூடியவர். கார்னர், ஃப்ரீகிக்கில் அபார திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அவர், இறுதி ஆட்டத்தில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தக்கூடும்.

இவர்களுடன் கோலோ கண்டே, மட்டுடியிட ஆகியோர் நடுகள வீரர்களாக சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நடுகளத்தில் இவவர்களது ஆட்டம் பலம் சேர்க்கும் விதத்தில் அமையக்கூடும். பெல்ஜியம் அணிக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்த சாமுவேல் உமிட்டி எதிரணியின் வாய்ப்புகளை தடுப்பதில் சுவராக விளங்கி வருகிறார். முன்கள வீரரான அவரை எதிரணியினர் மார்க் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. முன்னணி வீரரான ஆலிவர் கிரவுடு, பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை பலமுறை விரயம் செய்தார்.

இதனால் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார். கோல்கீப்பரும் கேப்டனுமான ஹியூகோ லொரிஸ், உருகுவே அணிக்கு எதிரான கால் இறுதியில் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்தெறிந்தார். மேலும் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டார். சாமுவேல் உமிட்டி, கண்டே ஆகியோரும் அவருக்கு உறுதுணையாக இருப்பது கூடுதல் பலம்.

குரோஷியாஅணி 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடம் பிடித்தது. தற்போது முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாக் அவுட் சுற்று, கால் இறுதி, அரை இறுதி என 3 ஆட்டங்களில் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து குரோஷியா அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து அசத்தியது.

கேப்டனான லுகா மோட்ரிச் உலகின் சிறந்த நடுகள வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். கோல் அடிப்பதுடன் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்குவகித்து வருகிறார். அவருக்கு ராக்கிடிச், இவான் பெரிசிச் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

முன்கள வீரரான மரியோ மண்ட்சூகிக் எதிர்பார்த்த அளவுக்கு உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தாவிட்டாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் வெற்றிக்கான கோலை அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் அவர், கூடுதல் உத்வேகத்துடன் செயல்படக்கூடும். மேலும் தற்காப்பு வீரரான விடா சிறந்த பார்மில் உள்ளார்.

எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தடுப்பதில் அரணாக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்தாக போராடும் குணம், மன வலிமை, மீண்டெழும் திறன் ஆகியவற்றால் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் குரோஷியா வீரர்கள் உள்ளனர். அதேவேளையில் 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது போன்று மீண்டும் ஒரு முறை மகுடம் சூட பிரான்ஸ் அணி ஆயத்தமாகி உள்ளது.

LEAVE A REPLY