இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்

13
மோதல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது அதிரடியால் 40.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா 114 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 82 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 167 ரன்கள் குவித்திருந்தது. மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவணும் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசி சிறந்த தொடக்கம் கொடுத்து வெற்றிக்கு உதவினார். முன்னதாக இங்கிலாந்து அணியை 268 ரன்களுக்குள் சுருட்டியதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில் 6 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழக்காமல் கோப்பையை வென்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 10 ஆக அதிரிக்கச் செய்வதில் விராட் கோலி குழுவினர் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

டி 20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த குல்தீப் யாதவ் மீண்டும் மிரட்ட காத்திருக்கிறார். அவரை கையாள்வதற்காக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் புதிய திட்டம் வகுக்கக்கூடும். முதல் ஒருநாள் போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் மட்டுமே அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இன்றைய ஆட்டத்தில் அவரது பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படக்கூடும். முதல் ஆட்டத்தில் குல்தீபுக்கு உறுதுணையாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த மற்ற இந்திய அணி பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை வழங்கினர். உமேஷ் யாதவ் 70 ரன்களையும், சித்தார்த் கவுல் 62, சாஹல் 51 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இதனால் வேகப்பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். புவனேஷ்வர் குமார் முழு உடல்தகுதியை எட்டாததால் இன்று களமிறங்குவது சந்தேகம்தான். அநேகமாக சித்தார்த் கவுலுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெறக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இங்கிலாந்து அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

LEAVE A REPLY