தூத்துக்குடி மாநகராட்சி ஆமை வேகத்தில் இயங்குகிறது : விரைவில் முயல் வேகத்தில் வேகமாக இயங்கும் – கீதாஜீவன் புகாருக்கு கடம்பூர் ராஜூ பதில்

40

தூத்துக்குடியில் இன்று (07.07.12018) படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்தின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு தெரிவித்தார்.
பழைய பேருந்துகளை எடுத்துவிட்டு புதிய பேருந்துகளை இயக்கும் வகையில் 550-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழகர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். அந்த பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சிகளை மாவட்டம் தோறும் உள்ள அமைச்சர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டத்திற்கான 15 பேருந்துகளை நேற்று இயக்கினார்.
அதேபோல் இன்று படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேருந்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் அவர், ‘’மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அம்மாவின் ஆட்சி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பழைய பேருந்துகளை புதிய பேருந்துகளாக மாற்றுவதற்காக 550 பேருந்துகலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அந்த பேருந்துகளை இயக்கும் வகையில் நேற்று தூத்துக்குடியில் 15 பேருந்துகளை இயக்கினோம். இன்று படுக்கை மற்றும் குளிர்சாத வசதிகளை கொண்ட நவீன ரக பேருந்துகளை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இயக்கி இருக்கிறோம்.
இந்த பேருந்து மக்களுக்கு சிறப்பாக பயன்படும். தென்மாவட்டங்களுக்கு படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகளை இயக்குவதுதான் இதுதான் முதல்முறை’’ என்றவரிடம், இந்த பேருந்துகளில் கட்டணம் ரூ 1,275 என்பது அதிகம்தானே. இது டி.வி உட்பட பல வசதிகளை கொண்ட தனியார் பேருந்துகளுக்கு இனையாக இருக்கிறதே என்று கேட்டனர்.
அதற்கு, ‘’தனியார் பேருந்தில் 40 சீட் இருக்கிறது. ஆனால் இந்த பேருந்தில் 30 சீட்தான். பயணிகளுக்கு விசாலமான இடவசதி இருக்கிறது. அந்த வகையில் கி.மீ க்கு இரண்டு ரூபாய் என்கிற அளவில்தான் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு மாநிலங்களில் இரண்டரை ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் மக்களிடமிருந்து இதுபோன்ற கருத்து நிலவுமானால் அதுகுறித்து பரிசிலிப்பதில் தவறில்லை.
நான்குவழிச்சாலையில் உள்ள மொடேலில் அடிப்படை வசதி இல்லை. ஆனால் விலை மட்டும் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் திருவள்ளுவர் பேருந்தாக இருந்தபோது திருவள்ளுவர் பேருந்து நிர்வாகம் சார்பில் இதுபோன்ற கடைகள் வைக்கப்பட்டிருந்தது. அது மக்களுக்கு வசதியாக இருந்தது. அதுபோல் ஏற்படித்தப்படுமா? என்கிற கேள்விக்கு, ‘’இது குறித்து சட்ட மன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே நான்குவழிச்சாலை ஓரங்களில், சுற்றுலாத்துறை சார்பில் நியாயமான விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருக்கிறதே என்கிற கேள்விக்கு, ‘’தனியார்களை பொறுத்தவரை லாபம் இருந்தால் இயக்குவார்கள் நஷடம் ஏற்பட்டால் மூடுவார்கள். நமது மாநிலத்தை பொறுத்த வரையில் அம்மா சொன்னதுபோல் மின் மிகை மாநிலமாகவேதான் இருக்கிறது.
13 ஆயிரத்து 510 மெகாவாட் மின்சாரம் நமக்கு தேவை இருக்கிறது. ஆனால் 15 ஆயிரம் மெகாவாட்க்கு மேல் நாம் மின் உற்பத்தி செய்து வருகிறோம். அம்மாவால் தொடங்கப்பட்ட உடன்குடி மின் திட்டமும் விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்’’ என்றார். அந்த திட்டத்திற்கும் மணப்பாடு உள்ளிட்ட பகுதியில் எதிர்ப்பு இருக்கிறதே ? என்கிற கேள்விக்கு, ‘’எந்த திட்டம் வந்தாலும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதை சமாளித்து நிறைவேற்றுவோம். 8 வழி சாலை திட்டமும் அப்படித்தான் நிறைவேற்றப்படும் தருவாயில் இருக்கிறது.
அதேபோல் உடன்குடி திட்டம் குறித்து கலந்தாலோசனை கூட்டங்களை நடத்தி நிறைவேற்றுவோம்’’. தூத்துக்குடி மாநகராட்சி ஆமை வேகத்தில் மிகவும் மெதுவாக செயல்படுகிறது என தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான கீதாஜீவன் புகார் சொல்லி வருகிறாரே என்கிற கேள்விக்கு, ’’தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் அவர்களே, ‘தூத்துக்குடி முயல் வேகத்தில் வேகமாக செயல்படுகிறது’ என சொல்லும் அளவிற்கு மிக வேகமாக செயல்பட துவங்கும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி எம்.பியான -நட்டர்ஜி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY