பெரிய ஜீயருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி

42

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெரிய, சிறிய ஜீயர்களின் வருடாந்திர கவுரவ ஊதியம் சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிரந்தர ஊழியர்களாக சுமார் 18 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்களாக பணி செய்கின்றனர். இங்கு சாதாரண கடைநிலை ஊழியர்கள் கூட மாதம் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். திருமலை தேவஸ்தானத்தின் கீழ் ஏழுமலையான் கோயில் மட்டுமல்லாது, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள், கபிலேஸ்வரர், கோதண்டராமர், ஸ்ரீநிவாச மங்காபுரம் பெருமாள் கோயில், கடப்பா ஸ்ரீராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருமலை தேவஸ்தானத்தில் பெரிய ஜீயராக ஸ்ரீ சடகோபன் ராமானுஜ ஜீயர் பொறுப்பாற்றி வருகிறார். இவர், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். கடந்த 1.5.2004-ம் தேதி இவர் திருமலை தேவஸ்தான பெரிய ஜீயராக நியமனம் செய்யப்பட்டார். இவரது சிஷ்யர் ஸ்ரீமன் ஸ்ரீநிவாசன் சிறிய ஜீயராக இவரால் நியமனம் செய்யப்பட்டார்.

இவர்களுக்கென திருமலை மற்றும் திருப்பதியில் தனித்தனி மடங்கள் உள்ளன. ஆகம சாஸ்திரப்படி தேவஸ்தானத்தை வழி நடத்தல், சுவாமிக்கு தேவையான கைங்கர்யங்கங்களை செய்தல், மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு உணவளித்தல் போன்ற நற்காரியங்களில் இவ்விரு மடங்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. தற்போது சுவாமி கைங்கர்யங்கள் அதிகமானதாலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததாலும், இவ்விரு ஜீயர்களின் கவுரவ ஊதியத்தை உயர்த்த தேவஸ்தானம் தீர்மானித்தது. அதன்படி பெரிய ஜீயருக்கு இதுவரை வழங்கப்பட்ட வருடாந்திர கவுரவ ஊதியமான ரூ.1.09 கோடியிலிருந்து இனி ரூ. 1.50 கோடியாகவும், சிறிய ஜீயருக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ. 79 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாகவும் தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.

LEAVE A REPLY