ஒரே நாளில் தமிழக சிறைகளில் இருந்து 527 கைதிகள் விடுதலை

27

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறை அதாலத் மூலம் 527 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் எ.நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எச்.ஜி. ரமேஷ் உத்தரவுப்படி ஜூன் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை அதாலத் நடைபெற்றது.

சிறை அதாலத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுக் கள், வட்ட சட்டப்பணிகள் குழுக்கள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர்களின் தலைமையில் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய சிறைச்சாலைகள், கிளைச் சிறைச்சாலைகளில் வழக்கு விசாரணைகள் நடை பெற்றன.

மொத்தம் 982 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில், 682 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சிறைவாசிகள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வழக்குகளில், சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி குடும்பத்துடன் சேர்ந்து வாழவும், இனி வரும் காலங்களில் திருந்தி வாழவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 11 பெண்கள் உட்பட 527 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இதில், ஜூன் 22-ம் தேதி மட்டும் 372 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் மத்திய சிறையில் நடைபெற்ற சிறை அதாலத்தில் சிறைத்துறை டிஐஜி முருகேசன் கலந்துகொண்டார். இந்த அதாலத்தில் மட்டும் மொத்தம் 133 குற்ற வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில், மொத்தம் 79 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY