பிளஸ் -2 தேர்ச்சி விகிதம் குறைந்து போனதற்கு என்ன காரணம் ? – நடுநிலை.காம்

60

பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்குள் நுழைவதற்கான முக்கியமான அனுமதி சீட்டுதான் பிளஸ்-2 ரேங்க் பட்டியல். ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் நிர்ணகிக்கிறது அந்த பட்டியல்.
வாழ்க்கையின் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக மாணவர்கள் படிப்போடு போராடுவது இந்த இடத்தில்தான். அந்த பொறுப்புணர்வுதான் மாணவர்களின் பெற்றோரையும் அவர்களோடு சுழலச்செய்கிறது. மாணவர்களோடு பெற்றோரும் கல்விச் சான்றிதழைத் துக்கி கொண்டு கல்வி நிலையங்களை தேடி அலைவார்கள். நல்ல இடத்தை கண்டுபிடிக்க நிறையவே விலையும் கொடுக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில கல்வி நிலையங்கள் மட்டுமே இருந்த காலங்களில் இந்த அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மாணவனின் தேவை, பெற்றோர்களின் ஆர்வம் போன்றவற்றால் நிறைய தொழில் அதிபர்களும் அரசியல் பிரமுகர்களும் கல்வித் தந்தை ஆனார்கள்.
படிக்க இடம் கிடைக்காமல் அலையும் மாணவர்கள் மூலம் வசதி வாய்ப்புக்களை பெருக்கி கொண்ட கல்வித் தந்தையர் நிறைய உண்டு. அந்த நோக்கத்தோடு தோன்றியது நிறைய கல்வி நிலையங்கள். ஒரு கட்டத்துக்கு மேல் கல்வி நிலையங்களிடையே போட்டி உருவாகியது. ‘எங்கள் நிறுவனத்தில் படித்தால் பல நன்மைகள் பெறலாம்’ என சிறப்பு பட்டியல்களை விளம்பரம் செய்தது கல்வி நிலையங்கள். அதன் மூலம் விளம்பர போட்டியும் உருவானது.
இந்த போட்டி, கல்வி நிலையங்கள் பலவற்றை மென்மேலும் வளர செய்தது. இதில் போட்டிபோட முடியாத சில கல்வி நிலையங்கள் சோர்ந்து போன வரலாறுமுண்டு. இந்த அவசர ஓட்டத்தில் மாணவர்கள், அவர்களது பெற்றோர், கல்வி நிலையங்கள் மற்றும் அவர்களோடு அரசும் பரபரப்பாக இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஈடுகொடுக்க முடியாத சிலர் பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இந்தநிலையில்தான் ’முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்கிற மார்க் அடிப்படையிலான தரைவரிசையை விளம்பர படுத்த கூடாது’ என சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ’மாணவர்களிடையே மன அழுத்ததை உருவாக்குகிறது’ என்பதே அவர்களின் குற்றசாட்டு.
சிலர் எழுப்பிய இந்த கோஷத்தை ஆமோதித்த மாநில கல்வித்துறை, தேர்வு முடிவுகளை விளம்பரம் செய்ய கூடாது என உத்தரவு போட்டது. அதனை கடுமையாக கண்காணிக்கவும் செய்கிறது.
இப்போது எந்த பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் முதலாவது இரண்டாவது என எந்தவித தரவரிசையும் வெளியிடுவதில்லை. கல்வி நிலையங்களிலும் அது முழுமையாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவை அரசு தரப்பு வெளியிட்டபோதே கல்வியாளர்கள் மத்தியில் சல சலப்பு வந்தது. கல்வி நிலையங்கள் தேவையில்லாமல் அதிகமாக விளம்பரபடுத்துகிறார்கள். போட்டியை உருவாக்குகிறார்கள்.

ஏராளமாக பணம் பறிக்கிறாகள் என்பது போன்ற குற்றசாட்டுக்களை அரசு நிர்வாகம் கண்காணிப்பதில் தவறில்லை. அதை வரைமுறை படுத்துவது அவசியம்.
அதற்காக ஒட்டுமொத்த விபரத்தையும் வெளியிடவே கூடாது என முடக்குவது, சரியானது இல்லை. இது கல்வி வளர்ச்சியின் அளவை குறைத்துவிடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்தை உண்மை என நம்ப செய்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு, ’கேள்வித்தாள் கடினமாக இருந்தது’ என்று சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். ’குறிப்பிட்ட சதவீதம் அது உண்மையாக இருக்கலாம். முழுவதும் அதுதான் காரணம் என சொல்லிவிட முடியாது’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.
அரசு கொடுக்கும் கல்வியை மட்டுமோ அல்லது சில தொண்டு நிறுவனம் மூலமாகவோதான் கடந்த காலங்களில் மாணவர்கள் கல்வி பெற்று வந்தார்கள். ஆனால் மாணவர்களே தேடிச்சென்று தனக்கு தேவையான கல்வியை தேர்ந்தெடுக்கும் காலம் உருவாகியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் மலிந்திருந்ததே அதற்கு காரணம். மாணவர்களிடையே போட்டி, கல்வி நிலையங்களிடையே போட்டி, மாவட்டங்களிடையே போட்டி என போட்டி உருவாகி இருந்தது தவறில்லை.
அதன் மூலம் கல்வி வளர்ச்சியின் அளவு அதிகரிக்கும் மாணவர்களிடையே கல்வி கற்கும் அக்கறை அதிகரிக்கும் ஆனால் எந்த விளம்பரமும் கூடாது என்கிற உத்தரவு இவையெல்லாவற்றையும் முடக்கிவிடும். இவ்வாண்டு பிளஸ் -2 தேர்வு முடிவே அதற்கு உதாரணம்’’ என்கிறார்கள்.
கல்வி போட்டியை முடக்கிவிடும் இத்தகைய உத்தரவை அரசு மறு பரிசீலனை செய்ய்ய வேண்டும். மீண்டும் முதல், இரண்டாவது, மூன்றாவது என வென்று வரும் மாணவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும். சிறப்பாக கல்வி கொடுக்கும் கல்வி நிலையங்களும் பாராட்டப்பட வேண்டும்.
போட்டிப்போடும் மாணவர்களை ஊக்குவிப்பதும் முடியாத மாணவர்களை மேம்படுத்த உதவுவதும் அவர்களை பாதுகாப்பதும் அரசின் கடமையே. அதற்காக போட்டியை முடக்கி ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு பங்கம் விளைவித்துவிட கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து !
-நடுநிலை.காம்

LEAVE A REPLY