ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரம்

23
ஆந்திரா

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மலைவாழ் மக்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்திற்கு சந்தைக்காக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் வெங்கடேஸ்வரா என்னும் தனியார் படகில் வந்தனர். சந்தைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் அந்தந்த கிராமத்திற்கு அதே படகில் சென்று கொண்டிருந்தனர். அந்தப் படகில் மொத்தம் 57 பேர் இருந்தனர். இந்நிலையில் தேவிப்பட்டினம் மண்டலம் மண்டூர் என்னும் இடத்தில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றுடன் மழையும் வீசியுள்ளது.

இதையடுத்து படகில் இருந்தவர்கள் அனைவரும் அதில் இருந்த ஜன்னல் கதவுகளை அடைத்துள்ளனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேல் பகுதியில் இருந்த 15 பேர் மட்டும் நீந்தியபடி கரைக்கு திரும்பி உள்ளனர். படகில் பயணம் செய்த மற்றவர்களின் நிலை தெரியாத நிலையில், கோதாவரி ஆறு 400 மீட்டர் அகலம் என்பதால் அதில் இருந்து ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன 32 பேரைத் தேடும் பணியில் விஜயவாடா, விசாகப்பட்டினம், காக்கிநாடாவில் இருந்து தேசிய பேரிடர் , மாநில பேரிடர் மீட்புப் படையினர் 3 குழுக்களாக பிரிந்து 22 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகு 150 அடி ஆழத்தில் முழ்கி இருக்கும் என்பதால் அதனை மேலே கொண்டு வரும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட அதிகாரிகளும் போலீஸாரும் மீட்புப் பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லட்சுமி வெங்கடேஸ்வரா என்னும் தனியார் நிறுவன படகு மண்டூர் என்னும் இடத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. படகின் உரிமையாளரும் டிரைவருமான காஜாவலி போலீஸில் சரணடைந்தார். 4 படகுகள் மேற்கு கோதாவரியிலும் 3 படகுகள் கிழக்கு கோதாவரியிலும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. காக்கிநாடாவில் இருந்து 60 பேர் கொண்ட மாநில பேரிடர் படையினரும் விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செயற்கைக்கோள் போனுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY