‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு

25
குதிரைபேரத்துக்கு

கர்நாடக அரசியலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதைத் தடுத்து, குதிரைபேரம் அரங்கேற பிரதமர் மோடிதான் காரணம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியுள்ளது. அதேசமயம், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பிடித்த பாஜகவும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளன.

இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை பிரிக்கும், குதிரைபேரம் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்றஜனதா தளம் ஆகியவை தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடக மக்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே தீர்ப்பளித்து இருக்கிறார்கள். ஆனால், எங்கள் இரு கட்சி கட்சிகளையும் ஆட்சி அமைக்க விடாமல், பாஜக தடுத்துவருகிறது.

குறிப்பாக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்.

ஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அணைப்பதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அப்படி எந்த எம்எல்ஏக்களும் காணாமல்போகவில்லை. அல்லது பாஜக பக்கமும் செல்லவில்லை.

எங்களின் எம்எல்ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம்.அவர்கள் பாஜக பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்கள். பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்களில் 8 பேர் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.

நாங்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம், முதல்வராக குமாரசாமியும், புதிய அரசும் பதவி ஏற்க இருக்கிறது. எங்களிடம் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்ஏல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆதலால், ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

LEAVE A REPLY