பாஜக, மோடியை எதிர்ப்போர் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

62

கர்நாடகத்தில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருப்பது பிரதமரின் நல்லாட்சிக்கு கிடைத்த சான்றிதழாகவே கருதுகிறோம். அதேசமயம் எதற்கெடுத்தாலும் மோடிக்கு எதிராக கருத்து சொல்வதையும், வெறுப்புணர்வைப் பரப்புவதையும் வாடிக்கையாகக் கொண்ட அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பாஜகவின் இந்த வெற்றிக்குப் பிறகாவது தங்கள் நிலையில் இருந்து மாற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ‘தி இந்து’வுக்கு நேற்று அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி:

கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே?

பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளும், அமைப்புகளும் எங்களை தோற்கடிக்க முழு வீச்சில் வேலை செய்தார்கள். ஊடகங்களும் பாஜகவுக்கு எதிராக களமாடின. அனைத்தையும் தவிடுபொடியாக்கி பாஜகவை மக்கள் வெற்றிபெறச்செய்துள்ளனர்.

ஆனாலும், பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே?

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதது வருத்தம்தான். ஆனால், பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளன.

குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டு விட்டதே?

பாஜக ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மூன்றாவது இடத்துக்கு வந்த குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இந்த தேர்தலை ஒரு மாநில தேர்தலாக பார்க்காமல் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான யுத்தமாகவே எதிர்கட்சிகளும், ஊடகங்களும் பார்த்தார்கள். இந்த தேர்தல், 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் என ராகுல்காந்தி உட்பட எல்லோருமே வெளிப்படையாக பேசினார்கள். கர்நாடக தேர்தல் முடிவு என்பது கடந்த 4 ஆண்டுகால மோடி தலைமையிலான ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நீங்கள் நற்சான்றிதழ் என்கிறீர்கள். ஆனால், பாஜகவுக்கும், மோடிக்கும் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டுதானே இருக்கிறது?

எதற்கெடுத்தாலும் மோடிக்கு எதிராக கருத்து சொல்வதையும், வெறுப்புணர்வைப் பரப்புவதையும் வாடிக்கையாகக் கொண்ட அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பாஜகவின் இந்த வெற்றிக்குப் பிறகாவது தங்கள் நிலையில் இருந்து மாற வேண்டும். தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜகவையும் மோடியையும் எதிர்ப்பவர்கள் அவமானப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மோடியை தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் தொடர்ந்து அங்கீகரித்துக்கொண்டே இருக்கி றார்கள்.

கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கர்நாடக தேர்தல் முடிவுகள் தென்னிந்தியாவில் பாஜகவின் வெற்றி வாசலை திறந்துவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது பாஜக தலைமையில் அமைந்த அதிமுக, திமுக அல்லாத கூட்டணி 19 சதவீத வாக்குகளை பெற்றது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு 50-க்கும் அதிகமான இடங்களில் 3-வது இடத்தை பிடித்தது. பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தோம். சென்னை மாநகரில் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தோம். தமிழக மக்கள் பாஜகவை ஏற்பார்கள்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

LEAVE A REPLY