கர்நாடகத் தேர்தல்: தப்பிப் பிழைத்த சித்தராமையா: பிறந்த மண்ணில் வீழ்த்தப்பட்டார்.

76

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியில் 1,996 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், மற்றொரு தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்தார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 12-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்றஜனதா தளம் 34 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் பதாமி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவைக் காட்டிலும் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேசமயம், சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜி.டி. தேவே கவுடாவை எதிர்த்து சித்தராமையா போட்டியிட்டார். இதில் தேவே கவுடாவிடம் 36,042 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தனது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியும் என்று தேர்தல் வாக்குப்பதிவு வரை நம்பிக்கையுடன் தெரிவித்து வந்தார்.

ஆனால், என்ன நினைத்தாரோ, தான் பிறந்த மாவட்டமான மைசூரில் சாமூண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் ஒக்கலிகா சமூகத்தினரிடன் வாக்குகள் தனக்கு கிடைக்காது என்பதை அறிந்தது, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பதாமி தொகுதியில் 2-வதாக போட்டியிட்டார்.

சித்தராமையா கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் உள்ள மைசூரு நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் தான் சித்தராமையா பிறந்த சித்தராமணஹன்டி அமைந்துள்ளது. ஆனால், அங்கு தற்போது அவர் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அதேசமயம், பதாமி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலுவை வீழ்த்தியுள்ளார் முதல்வர் சித்தராமையா.

மும்பை-கர்நாடக பகுதியில் உள்ள பதாமி தொகுதி பாஹல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தனக்கு போதுமான ஆதரவு இருக்காது என்பதை அறிந்த சித்தராமையா, பதாமி தொகுதியில் போட்டியிட்டார். ஏனென்றால் பதாமி தொகுதியில் சித்தராமையாவின் குருபா சமூகத்தினர் அதிகம் இருப்பதால் அங்கு போட்டியிட்டார். அங்கு மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒருவேளை பதாமி தொகுதியில் சித்தராமையா போட்டியிடாமல் இருந்திருந்தால், ஆளும் முதல்வர் தோற்றார் என்ற மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

LEAVE A REPLY