எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பழைய அம்சங்களுடன் அவசர சட்டம் கொண்டுவர திட்டம்

22
அவசர சட்டம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும் கடுமையாக்க, அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வன்கொடுமைக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் புகார்கள் மீது எஸ்சி, எஸ்டிவன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுபாஷ் காசிநாத் மகாஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

இதனை கடந்த மார்ச் 20-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்தது.

மேலும் “இந்த சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி அல்லது தனிநபரை உடனடியாக கைது செய்யக் கூடாது. மேலதிகாரிகளின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும். முதல்கட்ட விசாரணையை டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு புகாரில் முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம். பொய் புகார்கள் மூலம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது” என்று உத்தரவிட்டது.

முழுஅடைப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்சி, எஸ்டி பிரிவினர் கடந்த 2-ம் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். அப்போது வடமாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 11 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கா னோர் காயமடைந்தனர்.

மத்திய அரசு மறுசீராய்வு மனு

இதையடுத்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது. இதனால் நாட் டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த 3-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட நடைமுறையில் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

“சட்டத்தை நீர்த்துப் போகும் வகை யில் எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது. குற்றவியல் சட்ட நடைமுறையைப் பின்பற்றி கைது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்” என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். எனினும் 10 நாட்களுக் குப் பிறகு இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே விவகாரம் தொடர்பாக கேரள அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர் பான உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

அவசரச் சட்டம்

இந்நிலையில் மறு சீராய்வு மனு வில் உடனடியாக பலன் கிடைக்காது. விசாரணைக்குப் பிறகு மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவும் வாய்ப்புண்டு. மேலும் நீதிமன்ற விசாரணை முடிந்து முடிவு தெரிய காலமாகும். எனவே, நாட்டில் தற்போது எஸ்சி, எஸ்டி.க்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் தணிக்க, வன்கொடுமை தடுப்பு சட்டம், முன்பு எப்படி இருந்ததோ அதே அம்சங்களுடன் உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக் கவில்லை.

அப்படி இல்லையென்றால், வரும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின்போது இதுதொடர்பாக புதிய மசோதாவை தாக் கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவசர சட்டம் கொண்டு வந்தாலும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும். 2 நடவடிக்கைகளும் ஒன்றுதான். ஆனால், உடனடி பலன் கிடைக்க வேண்டுமானால் அவசர சட்டம்தான் சரியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பிரதமர் உறுதி

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியபோது, “தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் நலன்களைக் காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அவசர சட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத் திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மூத்த அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவசர சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், ‘‘தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக விடமாட்டோம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY