மாவட்டத்தில் அதிகளவில் மரங்களை நட்டு வளர்த்துவரும் கிராம உதய நிர்வாக இயக்குநருக்கு கலெக்டர் இயற்கை பாதுகாவலர் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

48
தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை அமைத்தபோது சாலையின் இருபுறமும் இருந்த ஏராளமான மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டது. இதுபோன்று மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதியதாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மரம் வளர்க்கும் திட்டத்தினை கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள், நீர்பிடிப்பு பகுதிகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்கா உள்ளிட்ட பொதுஇடங்களில் மரக்கன்றுகளை மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் பல்வேறு அமைப்புகள்  நட்டு வளர்த்து வருகின்றனர்.
கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் மேற்பார்வையில் தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச்சாலையின் பொட்டலூரணியில் இருந்து வசவப்பபுரம் வரை சாலையின் இருபுறமும் ஆழ்வார்தோப்பு கிராம உதயத்தினர் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் ஒருபகுதியாக கிராம உதயம் சார்பில் மகளிர் குழுக்கள் மூலமாக கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கு மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, தேக்கு, வேம்பு, புளி, புங்கை, வாகை, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு, வளர்க்கப்பட்டும் வருகிறது. இதுபோக அரசு&தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிராம உதயத்தின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு முறையாக வளர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதயத்தின் சார்பில் 7லட்சத்து 68ஆயிரத்து 364மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அம்மரக்கன்றுகள் முறையாக நட்டு வளர்க்கப்பட்டும் வருகிறது. இதற்காக கிராம உதயத்திற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்கும் பணியான ”மரம் வளர்ப்போம் மண்ணுயிர் காப்போம்” என்ற திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கிராம உதய நிர்வாக இயக்குநர் சுந்தரேசனுக்கு ”இயற்கை பாதுகாவலர் விருது” வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான இந்த விருதினை தூத்துக்குடியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவின்போது மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், கிராம உதய நிர்வாக இயக்குநர் சுந்தரேசனிடம் வழங்கி கவுரவித்தார்.
இதில், கிராம உதய சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பகவத்சிங், மேலாளர் வேல்முருகன், நிர்வாக பொறுப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இயற்கை பாதுகாவலர் விருது பெற்றுள்ள கிராம உதய நிர்வாக இயக்குநர் சுந்தரேசனுக்கு பணியாளர்கள், மகளிர் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY