மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி காயல்பட்டினத்தில் தரமற்ற பேவர் பிளாக் சாலைகள் போட நகராட்சி முயற்சி! தரமான தார் சாலைகள் போட வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

40

காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் சுமார் 50 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை புனரமைப்பதில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முறைக்கேடுகள் நகராட்சியில் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தது.

புதிய சாலைகளை போடும்போது பழைய சாலையை தோண்டாமலும், மழை நீர் தேங்காத வண்ணம் வாட்டம்

பார்க்காமல் சாலைகள் போடப்படுவதாலும், ஒப்பந்தப்புள்ளிகளின் விதிமுறைகள்படி தரமாக சாலைகள்

போடப்படாததாலும் – போடப்பட்ட சாலைகள் ஒரு சில மாதங்களிலேயே பாதிப்புக்கு உள்ளாகிவிடுகின்றன.

இதற்கிடையே – இம்மாதம் (ஜனவரி 2018) 9 ஆம் தேதி, காயல்பட்டினம் நகராட்சி – நகரின் ஐந்து முக்கிய சாலைகளை (அப்பாபள்ளி  தெரு, சொழுக்கார்  தெரு,மகுதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு) – பேவர் பிளாக் (PAVER BLOCK) கற்கள் கொண்டு அமைத்திட ஒப்பந்தப்புள்ளி திறந்துள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது.

காயல்பட்டினம் நகராட்சியில் – கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலைகள், தரமற்றவை ஆகும். போடப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே பேவர் பிளாக் சாலைகளின் கற்கைகள் பெயர்ந்து வர துவங்கிவிட்டன. இந்த பேவர் பிளாக் சாலைகள் – சறுக்குவதால் அடிக்கடி விபத்துகளும்  நேர்ந்துள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு, காயல்பட்டினத்தில் பேவர் பிளாக் சாலைகளை அமைக்கக்கூடாது என நகரின் பொது மக்கள், பொது நல அமைப்புகள் வலியுறுத்திவந்துள்ளன. நகரின் கடற்கரையை இணைக்கும் பிரதான சாலையை பேவர் பிளாக் கொண்டு அமைத்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை – பொது மக்களின், பொது நல ;அமைப்புகளின் எதிர்ப்புகளை அடுத்து, முந்தைய நகராட்சி கைவிட்டிருந்தது. ஆனால் – நகராட்சியில்  தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்திக்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் – ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பேவர் பிளாக் சாலைகளை அமைக்க முயற்சி செய்கிறார்கள்.

தரமற்ற, ஆபத்துகள் நிறைந்த பேவர் பிளாக் சாலைகளை நகரில் போடக்கூடாது என்றும், மழை நீர் தேங்காத வண்ணம், தரமான தார் சாலைகள் போடப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம் – இன்று (22-1-2018) இந்த சாலைகள் அமைந்துள்ள பகுதிகளின் ஜமாஅத்துகள் சார்பாக கோரிக்கை மனு – நூற்றுக்கணக்கான மக்களின் கையெழுத்துகளுடன், நகர பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY