பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு விட்டது: உலக வங்கி அறிக்கை

0
26
பண மதிப்பிழப்பு

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டுவிட்டது என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனால், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதில் மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 50 நாட்கள் இடைவெளியில் ரூபாய்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளக் கூறப்பட்டது.

பணத்தை வங்கியில் மாற்ற முடியாமல், வங்கிமுன் வரிசையில் நின்றதில் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர், ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்நிறுவனங்கள் முடங்கின.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டமிடப்படாத அறிவிப்பு, செயலாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு குறித்து தெரியவில்லை. இதன் காரணமாக பெரும் குழப்பங்களும், வணிகர்கள் பெரிய துன்பங்களையும் சந்தித்தனர். இந்த இரு விஷயங்களும் ஆளும் பாஜக அரசுக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில், ‘தெற்கு ஆசிய பொருளாதார நோக்கம்’ குறித்த ஆண்டு அறிக்கையை உலக வங்கி நேற்று வெளியிட்டது. உலக வங்கியில் தலைமைப் பொருளாதார அதிகாரி மார்டின் ராமா கூறியதாவது:

\

தெற்கு ஆசியாவில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. கிழக்கு ஆசியா, பசிபிக் பிராந்தியத்தைக் காட்டிலும் இந்தியா வேகமாகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும். இந்தியாவின் வேகமாகப் பொருளாதார வளர்ச்சியால், தெற்கு ஆசியாவின் வளர்ச்சி 2018ம் ஆண்டு 6.9சதவீதமாகவும், 2019ம் ஆண்டு 7.1 சதவீதமாகவும் இருக்கும்.

கடந்த 5 காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கத்தால், தெற்காசிய பொருளாதாரத்தில் முன்னணி என்ற இடத்தை இழந்தது.

கடந்த காலங்களில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கம் இருந்தது. அந்த பாதிப்புகளில் இருந்து இந்தியா இப்போது மீண்டுவிட்டது. இந்த பாதிப்புகள் பெரும்பாலும் ஏற்றுமதி துறையிலும், முதலீடுகளிலும் இருந்தது. அதுவும் குறைந்துவிட்டது.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வேதனைக்குரிய வகையில் இருக்கிறது.

வளர்ச்சி இருந்தாலும் கூட, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது இல்லை. ஆண்டுக்கு 81 லட்சம் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேசமயம், பெண்கள் பல்வேறு துறைகளில் இருந்து வேலைவாய்ப்பை உதறிச்செல்வது குறைந்து வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதை உறுதியாக நம்புகிறோம். விரைவில் இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சிக் காலத்தை தொடும் நேரம் தொலைவில் இல்லை. ஆனால், அதற்குத் தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் அவசியம்.

இவ்வாறு மார்டின் ராமா தெரிவித்தார்.

LEAVE A REPLY