பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என கர்நாடக மக்களிடம் பிரச்சாரம் செய்கிறேன்- பிரகாஷ் ராஜ் அதிரடி

0
43
பிரகாஷ் ராஜ்

கர்நாடக மக்களிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறுவதைக் காட்டிலும் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறேன். கர்நாடகாவில் பாஜக தோற்கும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றத் தென் மாநிலங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நான் இப்போது செல்லுமிடங்களில் எல்லாம் மக்களிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதில்லை. தயவு செய்து பாஜகவுக்கு வாக்களித்து விடாதீர்கள் என்றுதான் வெளிப்படையாக மக்களிடம் கூறி பிரச்சாரம் செய்து வருகிறேன்.

நாட்டில் பாஜக இல்லாத சூழல் வருவதற்கு நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்தியாவில் வகுப்புவாத கொள்கைகள் கொண்ட பாஜக போன்ற கட்சிகள் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

இந்தியாவில் மிகப்பெரிய புற்றுநோய் போன்று வகுப்புவாதம் வளர்ந்து வருகிறது. முதலில் அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பின் ஊழலை ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கலாம்.

ஊழல் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். ஆனால், வகுப்புவாதம், மதவாதம் என்பது சமூகத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகுந்த ஆபத்தானது.

சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, 2019ம் ஆண்டு தேர்தலில், நரேந்திர மோடியின் அலையில் எதிர்க்கட்சிகள் கூடாரத்தில் இருக்கும் விலங்குகள் அடித்துச்செல்லப்படுவார்கள் என்று பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மிருகங்கள்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்றால், எதற்காக இங்கு நீங்கள் வந்தீர்கள்? அப்போது கர்நாடக மக்களை நாய்களைப் போலவும், பூனைகளைப் போலவும்தான் நீங்கள் நினைக்கிறார்களா?. இந்தப் பூனைகளுக்கு பாலை ஊற்றினால் கண்ணைமூடிக்கொண்டு குடித்துவிடும், இந்த நாய்களுக்கு பிஸ்கட்களை வீசி எறிந்தால் வாலை ஆட்டிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறாரா?.

மோடியை மிகப்பெரிய வெள்ளம்போல் சித்தரிக்கிறார் அமித் ஷா, ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் வெள்ளம் எப்போதும் மக்களுக்கு நல்லதுகிடையாது. வெள்ளம் மக்களின் சொத்துக்களையும், மக்களையும் அழித்து ,சேதத்தைத்தான் உண்டாக்கும். அதைப்போலத்தான் மோடியும்.

லிங்காயத் சமூகத்தினர் தனி மதம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் இந்து மதத்திலிருந்து பிரிந்து செல்ல நினைக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை

ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் எதிராக நான் குரல் கொடுப்பேன். ஆனால் இப்போது என்னுடைய முதல் நோக்கம் பாஜகவுக்கு எதிராகத்தான்.

பாஜக நாட்டின் ஒற்றுமையையும், மதச்சார்பின்மையையும், சமத்துவத்தையும் கொலை செய்து வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.

நாட்டில் வெறுப்புணர்வு பரப்பப்படுவதற்கு எதிராகப் பிரதமர் மோடிக்கு எதிராக ஏராளமான கேள்விகள் கேட்டுஇருக்கிறேன். ஆனால், எதற்கும் பதில் இல்லை. எதிர்கால இந்தியா வலிமையான கூட்டாச்சியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

காவிரி விவகாரம்

முன்னதாக புதன்கிழமை நடிகர் பிரகாஷ் ராஜ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நம்முடைய நோக்கம் நதிகளுக்காக சண்டையிட்டுக் கொண்டு இருக்கக் கூடாது, பருவநிலை மாற்றத்தை வென்று, அதை இயல்புக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருக்க வேண்டும்.

எனக்குத் தெரியும் எந்தக் கட்சியும், காவிரி விவகாரத்தைத் தீர்க்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்வார்கள். மிகப்பெரிய நைல் நதியை பல்வேறு நாடுகள் அமைதியாகப் பிரித்துக்கொண்டு, பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, காவிரி நதியை இரு மாநிலங்கள் சண்டையில்லாமல் பகிர்ந்து கொள்ள முடியாதா?.

மக்கள் நதிக்காக சண்டையிடுவதற்குப் பதிலாக, முறையாகத் திட்டமிட்டு, ஒன்றாகச் செயலாற்ற வேண்டும். காவிரி நதிநீர் படுகையில் சூழல் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. நதிப்படுகைகளில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படுகிறது, நிலத்தடி நீர் ஊறுவதற்கு எந்தவிதமான வழியும் இல்லை.

இந்தச் சூழலில் நாம் காடுகளை அழிப்பதைத்தடுப்பதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY