பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கேட்டோம்: ஆளுநரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி

0
19
காவிரி

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத சூழ்நிலையில், மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்காத காரணத்தினால் தமிழகம் இன்றைக்கு கொந்தளிப்பான, அசாதரணமான ஒரு நிலையை அடைந்திருப்பது குறித்து தமிழக ஆளுநரிடம், அனைத்து கட்சிகளின் சார்பில் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

வரும் 3 ஆம் தேதி வரையிலும் பொறுத்திருக்க வேண்டிய நிலையில், உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, 3 ஆம் தேதி வரை மத்திய அரசு காத்துக் கொண்டிருக்காமல், அதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கின்ற முழு முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். எனவே, தமிழக ஆளுநர் இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே அரசு சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திலும், தொடர்ந்து சட்டமன்றத்திலும் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், அனைத்து கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு நேரில் அழைத்து சென்று, பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும், அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

இதுநாள் வரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, “தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய நீங்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியுமா?”, என்று நாங்கள் கேட்ட நேரத்தில், ”உங்களுடைய உணர்வுகளை நாங்கள் நிச்சயமாக புரிந்து கொண்டிருக்கிறோம். எனவே, பிரதமரிடம் இதுகுறித்து பேசி, உங்களை சந்திக்க வைக்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன்”, என்ற உறுதியை தமிழக ஆளுநர் வழங்கியிருக்கிறார்.

மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநரை எதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்களே?

மாநில சுயாட்சி என்ற எங்களுடைய கொள்கையின் அடிப்படையில் நாங்கள் போராடுகிறோம். இப்போதல்ல, எப்போதும் அதை வலியுறுத்துவோம். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசு செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால், மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கிருக்கும் ஆளுநரிடம் இந்தப் பிரச்சினைகள் குறித்து சொல்லியிருக்கிறோம்.

ஜனாதிபதியை நீங்கள் சந்தித்து, இதுகுறித்து வலியுறுத்துவீர்களா?

உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அதை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதால் தான், அனைத்து கட்சிகளின் சார்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து, போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஆளுநரை நேரில் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிவித்திருக்கிறோம். அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, முடிவெடுப்போம்.

முதல்வர் நேற்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியிருக்கிறாரே?

அவர் மனு அளித்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், அந்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறதா, அந்தக் கோரிக்கை இருக்கிறதா என்பது தெரியாது. ஏனென்றால், முதல்வர் மூலமாக பிரதமரை சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால், அப்படியொரு கோரிக்கை முதல்வரிடமிருந்தோ, தமிழக அரசிடமிருந்தோ வரவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். எனவே, நேற்று அளித்த மனுவில் கூட, “எங்கள் ஆட்சியை காப்பாற்ற தயவுசெய்து நீங்கள் துணை நிற்க வேண்டும், எங்களுடைய ஆட்சியை கவிழ்த்து விடாதீர்கள், இந்த ஆட்சிக்கு இடைஞ்சல் எதுவும் வந்துவிடக்கூடாது”, என்ற கோரிக்கையைதான் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

உள்ளபடியே அவர் என்ன செய்திருக்க வேண்டும்? சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ சாலையில் செல்லும்போது மனு கொடுப்பது போல, பிரதமர் விமான நிலையத்தில் டெல்லிக்குக் கிளம்பும்போது ஒரு மனுவை வழங்கி இருக்கிறார் என்றால், இதெல்லாம் வெறும் நாடகம் என்பதுதான் உண்மை.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் இல்லாமல் வேறு பெயரில் இதை நிறைவேற்றினால் ஏற்பார்களா என்று மத்திய நீர் வளத்துறை செயலாளர் கேட்டு இருக்கிறாரே?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதை அமைக்கும் வரை எங்களுடைய போராட்டம் நிச்சயம் தொடரும். அவர்கள் பெயரை மாற்றினார்களா, இல்லையா என்பதெல்லாம் இப்போது எங்களுடைய பிரச்சினையல்ல.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY