காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு.

0
18
காவிரி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டிருந்த காவிரி உரிமை மீட்புப் பயணம் நேற்று நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை, ரயில் மறியல் என போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக ஆதரவுக் கட்சிகளின் சார்பில் கடந்த 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து திமுக ஆதரவுக் கட்சிகளின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கினார். கடந்த 6 நாட்களாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டு விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்து உரையாடினார்.

காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் அரியலூரில் இருந்து திருமாவளவன் உள்ளிட்டோருடன் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பயணமும் நேற்று நிறைவு பெற்றது. அதையொட்டி கடலூரில் நேற்று இரவு அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆளுநருடன் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகிய 9 கட்சிகளின் தலைவர்கள் இன்று பகல் 11.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசுகின்றனர்.

கார் பேரணி ரத்து

கடலூரில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி நடப்பதாக இருந்த கார் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் கார் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் கடைசி நாள் பயணத்தை, ஸ்டாலின் நேற்று கருப்புச் சட்டை அணிந்து தொடர்ந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் தொடங்கிய இப்பயணம் சீர்காழி, கொள்ளிடம் வழியாக கடலூரைச் சென்றடைந்தது.

LEAVE A REPLY