பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காத பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்.

0
32

பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காத பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 4-ம் நாளான நேற்று தனது பயணத்தை தொடர்ந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 4-வது நாளான நேற்று திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நடந்து வந்த மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் பயணக் குழுவினருடன் காட்டூரில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தேவர்கண்டநல்லூருக்கு மாட்டு வண்டியில் ஸ்டாலின் மற்றும் பயணக் குழுவினர் சென்றனர்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பிரதமரை சந்திக்க தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கவில்லை, ஒரு தாக்கீது கூட தரவில்லை என மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரது கருத்தை தமிழக அரசோ, முதல்வரோ, துணை முதல்வரோ இதுவரை மறுக்கவில்லை. அதைக்கூட செய்யாத பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்கிய 2-வது பயணக் குழுவும், இந்தக் குழுவும் நாளைகடலூர் சென்றடைந்து, அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 13-ம் தேதி சென்னையில் ஆளுநரை சந்திப்பதற்கு கடலூரில் இருந்து பேரணியாகச் செல்ல உள்ளோம் என்றார்.

மன்னார்குடி வழியாகச் சென்ற ஸ்டாலினுடன் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் மற்றும் விவசாயிகள் அரை கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றனர். திருத்துறைப்பூண்டியில் நேற்று பயணம் முடிவடைந்தது.

கோட்டூரில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்பதற்காக முன்கூட்டியே எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். காவிரி உரிமையை பெறுவதற்காக, விவசாயிகளுக்காக நாங்கள் சிறை செல்ல தயங்கமாட்டோம்” என்றார்.

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2-வது குழு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இருந்து 2-வது நாள் பயணத்தை நேற்று தொடங்கி திருவையாறு வழியாக கும்பகோணத்துக்கு சென்றது

LEAVE A REPLY