காரைக்கால் வரும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் ஸ்டாலினுடன் பங்கேற்பு: நாராயணசாமி தகவல்

0
24

காரைக்காலுக்கு வரும் 11-ம் தேதி வரும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

‘’காரைக்கால் கடைமடைப் பகுதியாக இருப்பதால் வறட்சி என்றாலும், வெள்ளம் என்றாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு காரைக்கால் விவசாயிகளின் நலன் மிக முக்கியம். தமிழகம், கர்நாடகாவில் இருந்து பெறும் காவிரி நீரில் உரிய விகிதாச்சாரத்தை காரைக்காலுக்கு தருவதில்லை. தமிழகம், கர்நாடகமும் புதுச்சேரியை வஞ்சிக்கின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. புதுச்சேரி விவசாயிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களைக் காக்கும் கடமையும் பொறுப்பும் புதுச்சேரி அரசுக்கு உண்டு.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரியைக் காக்க வலியுறுத்தி திருச்சியில் இருந்து கடலூர் வரை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் வரும் 11-ம் தேதி காரைக்காலுக்கு வருகிறது. அதில் நான், காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், காரைக்காலைச் சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்கிறோம். மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு அழுத்தம் கொடுப்போம்.

கடந்த 2014-ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.70க்கும், டீசல் ரூ.58க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலராக குறைந்தாலும் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.63க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியைக் குறைக்க வேண்டும்.’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY