குரங்கணி காட்டுத் தீ: வன அதிகாரி சஸ்பெண்ட்

0
23
சஸ்பெண்ட்

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதிக்குள் மலை ஏற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை டிரக்கிங் கிளப் காட்டுத் தீ குறித்த விளக்கத்துக்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி 11 ஆக அதிகரிப்பு

சென்னை டிரக்கிங் கிளப் சார்பில் 36 பேர் கொண்ட குழுவினர் மகளிர் தினத்தையொட்டி போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு, மலை ஏற்றம் சென்றனர். அப்போது, கொழுக்கு மலையில் இருந்து குரங்கணிக்கு மீண்டும் திரும்பி வரும்போது மலை ஏற்றத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியானார்கள்.

மேலும், 5-க்கும் மேற்பட்டோர் தேனி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவந்த ஒருவர் இன்று சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

சஸ்பெண்ட்

இதற்கிடையே காட்டுத் தீ விபத்து நடந்த போது, அன்று பணியில் இருந்த வனத்துறை அதிகாரி ஜெய்சிங் என்பவரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மலை ஏற்றத்துக்கு வந்த 36 பேரை அழைத்துச் சென்ற உள்ளூர் வழிகாட்டி ரஞ்சித் (வயது 30) என்பவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

குரங்கணி வனப்பகுதிக்குள் வேறு யாரேனும் சுற்றுலாப் பயணிகள் சிக்கி இருக்கிறார்களா என்று வனத்துறையினர், போலீஸார் தேடி வந்தநிலையில் அந்த தேடுதல் வேட்டை இன்று நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊழியர்கள் பற்றாக்குறை

குரங்கணி பகுதியில் காட்டுத் தீ பரவாமல் இருக்கவும், மற்ற இடங்களில் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ”குரங்கணி வனப்பகுதி 3ஆயிரம் ஹெக்டேர் கொண்ட பகுதியாகும். இங்கு 1097 வனத்துறையினர் ஊழியர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

மலை ஏற்றத்துக்கு சென்னை டிரக்கிங் கிளப்புக்கு எந்தவிதமான அனுமதியும் யாரும் தரப்படவில்லை. மலை ஏற்றம் செல்பவர்கள், முறைப்படியான விதிமுறைகள், வழிகாட்டிகள் உடன் வந்தால்மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

பரந்துவிரிந்த வனப்பகுதியில், ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாடிவரும் வனத்துறையால், பல்வேறு பகுதிகளில் இருந்து நுழையும் பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது என்பது இயலாது.

மலைஏற்றம் சென்றவர்கள் கொழுக்குமலை எஸ்டேட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள், இது சரியானது அல்ல. வனத்துறையின் குடும்ப உறுப்பினர்கள்கூட வனத்துக்குள் தங்க அனுமதி இல்லாதபோது இவர்கள் தங்கி எவ்வாறு தங்க முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிடிசி அறிக்கைக்கு அதிகாரிகள் மறுப்பு

இந்நிலையில், சென்னை டிரக்கிங் கிளப் (சிடிசி) இன்று காட்டுத் தீ சம்பவம் நடந்தவிதம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், மலைப்பகுதியின் அடிவாரத்தில் விவசாயிகள் சிலர் காய்ந்த புற்களை தீவைத்து கொளுத்தியபோது, காற்றின் வேகத்தால், தீ வேகமாகப் பரவியது. அதில் சிக்கிக்கொண்டோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைஏற்றம் செல்லும் ஒவ்வொருவரும் குரங்கணி வனத்துறை சோதனைச் சாவடியில் தலா ரூ.200 நுழைவுக்கட்டணம் செலுத்தி ரசீது பெற்று இருக்கிறோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால்,வனத்துறை சார்பில் எந்தவிதமான அனுமதியும் தரப்படவில்லை, எந்தவிதமான நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை, நுழைவுச்சீட்டும் தரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY