ஆழ்கடலுக்கு சென்ற குமரி மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்: வருவாய் நிர்வாக ஆணையர்

0
19
குமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தினங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, அம்மாவட்ட வருவாய் துறை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குமரி கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 3வது நாளாக திங்கள் கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

அதேபோல், சின்னமுட்டம், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று முதல் மேலும் 48 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தூத்தூரில் 10 தினங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, புயல் சின்னம் குறித்து உரிய முறையில் தகவல் சென்று சேராததால், 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இதனால், மீனவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். ஒக்கி புயலுக்குப் பிறகு கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட குமரி மீனவர்களின் நிலை குறித்து அம்மாவட்ட வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் தெரிவித்தார். அதன்படி, கர்நாடகாவில் 30, லட்சத்தீவில் 16, கோவா கடற்கரையில் 5 விசைப்படகுகள் என 51 விசைப்படகுகளும் பத்திரமாக கரை ஒதுங்கியுள்ளதாகவும், அந்த விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வருவாய் நிர்வாக ஆணயர் தெரிவித்தார்.

LEAVE A REPLY