அய்யாக்கண்ணு சொன்ன கெட்ட வார்த்தையை மறைக்கிறார்கள்– தூத்துக்குடி பா.ஜ.க-வினர் கொதிப்பு( மோதல் வீடியோ)

0
126
பா.ஜ.க

அய்யாக்கண்ணு சொன்ன கெட்ட வார்த்தையை மறைக்கிறார்கள். பெண் அடித்துவிட்டார் என்பதை மட்டும் பெரிதாக்குகிறார்கள் – தூத்துக்குடி பா.ஜ.க-வினர் கொதிப்பு

கடந்த 8-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே அய்யாக்கண்ணு மற்றும் பா.ஜ.க பெண் நிர்வாகி நெல்லையம்மாள் இடையே நடந்த அடிதடி விவகாரம் குறித்துதான் அப்படியொரு உக்கிரம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்குழு, நடைபயண பிரசாரம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். மார்ச் 1-ம் தேதி   கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய அந்த  விழிப்புணர்வு பிரசாரம், நெல்லை மாவட்டத்தில் முடிந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றது.

8-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே அய்யாக்கண்ணு உள்ளிட்ட அவரது குழுவினர், பக்தர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், பக்தர்கள் யாரும் இந்த நோட்டீஸை வாங்காதீங்க என்றும் கோவில் வளாகம் பகுதிக்குள் நோட்டீஸ் கொடுக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்வித்தார்.

அப்போது அய்யாக்கண்ணு மற்றும் நெல்லையம்மாள் தரப்புகளுக்கிடையே
தகராறு ஏற்பட்டு இரு தரப்பும் அடிதடியில் இறங்கிவிட்டனர். அங்கு நின்ற பக்தர்கள் சிலர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி, நாடு முழுதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. ’நெல்லையம்மாள் அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அடித்தார்’ என்கிற செய்தி, விவசாயிகள், அரசியல் இயக்கத்தார் மற்றும் சமூக ஆர்வலர்களை பா.ஜ.க -வுக்கு எதிராக கருத்து சொல்ல வைத்தது.

இந்தநிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்த நெல்லையம்மாள், ’அய்யாக்கண்ணு என்னை அவதூறாக பேசி, தாக்கிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  திருச்செந்தூர் போலீஸில் புகார் செய்தார்.

தகவல் அறிந்து நெல்லையம்மாளை பார்க்க சென்ற பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசைசெளந்திரராஜன், அய்யாக்கண்ணு அவதூறாக பேசி எங்கள் நிர்வாகியை தாக்கியிருக்கிறார். அவர் மீதும் அவருடன் வந்தவர் மீதும் சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருந்த தக்கதும் கண்டிக்க தக்கதும் ஆகும்’ என தெரிவித்தார்.  அதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட பா.ஜ.க சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

அய்யாக்கண்ணு சார்பில் நெல்லையம்மாள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் நெல்லையம்மாள் கொடுத்த புகாருக்கு போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க தலைவரான பாலாஜி-யிடம் பேசினோம், ‘அய்யாக்கண்ணு என்பவர் முழுக்க முழுக்க பிரதமர் மோடிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே சில எதிர்ப்பு சக்தியால் கொண்டு வரப்பட்ட நபர் அவர். அவரும் பல வழிகளில் முயன்றுதான் பார்க்கிறார். நல்லாட்சி செய்து வரும் மோடிக்கு கெட்ட பெயரை  ஏற்படுத்த முடியவில்லை.

இப்போ, ‘மோடிக்கு நல்ல புத்தியை கொடுய்யா சாமி’ என கோவில்கள் தோறும் சென்று  வேண்டுகிறார். அதன் மூலமாவது மோடிக்கு கெட்ட பெயர் வந்துவிடாதா என எதிர்பார்க்கிறார். ஆனால் அந்த கடவுள், மோடிக்கு நல்ல பெயரை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இப்போது அவர் மேற்கொண்டு வரும் நடைபயண பிரசார பயணம், மாநிலம் முழுவதும் என்கிறார்கள். அதற்கு யார் செலவு செய்கிறார் என பார்க்க வேண்டும்?. ஒரு குழுவை ஒரு தனிமனிதன் அத்தனை மாவட்டங்களுக்கும் கூப்பிட்டுக் கொண்டு போகிறார் என்றால் எவ்வளவு செலவு ஆகும்?. தி.மு.க போன்ற எதிர்ப்பு சக்திகள்தான் அதற்கு உதவுவதாகவே நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

அடுத்து தமிழகத்துக்குள் பா.ஜ.க ஆட்சிக்கு வரக் கூடும் என்கிற தகவல், பல்வேறு எதிர்ப்பு சக்திகளை அச்சுறுத்துகிறது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.கவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தற்போதை அரசு கூட, மறைமுகமாக அப்படியொரு நிலை கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அதுதான் பா.ஜ.கவுக்கு பலமாகவே அமையப்போகிறது.

திருச்செந்தூர் மோதல் விவகாரத்தை பொறுத்தவரையில் அய்யாக்கண்ணு வழிபாட்டுத்தளத்துக்குள் போய் பிரசார நோட்டீஸ் கொடுத்தது முற்றிலும் தவறான செயல். தவறு என அதை தடுக்க போன எங்கள் கட்சி பெண் நிர்வாகி நெல்லையம்மாளை, அய்யாக்கண்ணு அவதூறாக பேசியதோடு மட்டுமில்லாமல் தாக்கவும் செய்கிறார். அய்யாக்கண்ணுவின்  அவதூறான பேச்சை கேட்ட அந்த பெண், திருப்பி தாக்குகிறார். அதற்கு பிறகு அய்யாக்கண்ணோடு வந்தவர்களும் அந்த பெண்ணை விரட்டி விரட்டி தாக்குகிறார்கள்.

நல்ல வேளையாக அந்த பகுதியில் நின்ற பக்தர்கள் சிலர் அவர்களை தடுத்திருக்கிறார்கள். அல்லது நெல்லையம்மாள் அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பார்.  ஆனால் அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் தாக்கிவிட்டார் என்கிற செய்தி மட்டும்தான் வெளியே வந்திருக்கிறது. அய்யாக்கண்ணு ஒரு பெண்ணை தொடர்ந்து பல தடவை அவதூறாக பேசியது அப்படியே அமுக்கப்படுகிறது. இந்த நிகழ்வு எல்லாமே முழுமையாக வீடியோ ஆதாரமாக இருந்தும் உண்மை வெளியே வரவில்லை.

இப்படித்தான் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உண்மை மறைக்கப்படுகிறது. மோடியின் நல்லாட்சியை தமிழக மக்கள் அனுபவிக்க கூடாது என இங்குள்ள அரசியல்வாதிகளும் சில அமைப்புகளும் திட்டமிட்டு சதி செய்து வருகிறார்கள். அதற்கு சில ஊடகங்களும் துணை போவதாகவே தெரிகிறது.

சம்பவம் நடந்த அன்றே புகார் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுவரை போலீஸ் எப்.ஐ.ஆர் போடவில்லை. வெறும் சீட்டை மட்டும் தந்துவிட்டு சும்மா இருக்கிறார்கள். வேணுமென்றே இழுத்தடிக்கிறார்கள்.

எங்கள் பெண் நிர்வாகியை அவதூறாக பேசிய அய்யாக்கண்ணு மற்றும் அவரது குழு மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். நாங்கள் கொடுத்த புகாரின் படி அவர் மீது 147(ஆட்களோடு சேர்ந்து கலகம் செய்தல்), 294பி(கெட்ட வார்த்தைகளால் பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 506(2)(மிரட்டுதல்) மற்றும் 4 (பெண்கள் வன்கொடுமை சட்டம்) இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் போலீஸார் அதற்கு தயாரில்லை.போலீஸார் இதுவரை எப்.ஐ.ஆர் போட்டு நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே நாங்கள் விரைவில் கோர்ட்க்கு போக போகிறோம்’’ என்றார் ஆவேசமாக.

இந்த விவகாரம் குறித்து அய்யாக்கண்ணு தரப்பும் கருத்து சொல்ல விரும்பினால், அதையும் வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.

LEAVE A REPLY