பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் இனி கனவிலும் எவருக்கும் ஏற்படாது: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

0
27
பெரியார்

இனி கற்பனையிலும் கனவிலும்கூட பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்கிற எண்ணம் எவருக்கும் ஏற்படாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,விளிம்புநிலை மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, சமநீதி என்பதற்காக பெரியார் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் சட்டங்களாகவும், அரசாணைகளாகவும் மாறின. திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை ஆக்கப்பட்டது. வெறும் வார்த்தைகளால் காணிக்கையாக்கப்படவில்லை. சுயமரியாதை திருமண முறைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து நிறைவேற்றி, அதை பெரியாருக்கு காணிக்கை ஆக்கினார் அண்ணா. அதுபோல இந்தி ஆதிக்கத்துக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என தாய்மொழி காக்கும் வேலியாக இருமொழிக் கொள்கை நிறைவேற்றப்பட்டது.

அண்ணா வழியில் ஆட்சியைத் தொடர்ந்த கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்றினார். மகளிருக்கு குடும்ப சொத்தில் சமபங்கு கிடைத்தது. அனைவரும் சமஉரிமையுடன் வாழும் சமத்துவபுரங்கள் பெரியார் பெயரிலே உருவாக்கப்பட்டன. இன்றைய தலைமுறை கல்வி கற்று, உரிமை பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு பெரியார்தான் காரணம். தனது போராட்டங்களால் அவர் நிலைநாட்டிய சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளவு தமிழகத்தில் 69 சதவீதமாக உயர்ந்தது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க திமுக துணை நின்றது.

பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக வக்கிரமாக கொக்கரித்து, தமிழ்ச் சமுதாயத்திடம் சகட்டுமேனிக்கு வாங்கிக் கட்டிக்கொண்டு, வாய்பொத்தி மூலையில் முடங்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டக் களமிறங்கியிருக்கும் அனைத்து தரப்பினருக்கும் திமுக சார்பில் வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவிக்கிறேன். இனி கற்பனையிலும் கனவிலும்கூட பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்கிற எண்ணம் எவருக்கும் ஏற்படாது. இன்னும் எவரேனும் இதே எண்ணத்துடன் மிச்சமிருந்தால், பெரியார் சிலைகளை தொட்டுப் பார்க்கட்டும். திராவிட லட்சியங்களை காக்கும் பெரியாரின் பேரப்பிள்ளைகளான திமுகவினர் யார் என்று காட்டும் நேரம் வரும்.

திரிபுராவில் புதிய அரசின் துணையுடன் புரட்சியாளர் லெனின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY