அமெரிக்க இளம் பெண்ணுக்கு அரிய நோய்: கண்ணிலிருந்து 14 புழுக்கள் அகற்றம்

0
59

அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு கண்களில் அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளது. அவரது இடது கண்ணிலிருந்து 14 புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன.

பொதுவாகப் புராணங்களிலும், லத்தீன் அமெரிக்க மேஜிக்கல் ரியலிச கதைகளிலும் இப்படிப்பட்ட சித்தரிப்புகளை நாம் காண முடியும், பிறக்கும் போதே கண்களைத் திறந்து கொண்டு பிறக்கும் கதைகள் உண்டு. ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதக் கண்ணிலிருந்து புழுக்கள் வெளிவருவது புனைவா, நிஜமா என்று நம்மை ஆச்சரியத்தில் தள்ளினாலும், இது புனைவல்ல, நிஜமே என்று தெரியவந்த போது மருத்துவ விஞ்ஞான உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு  புழுக்கள் எடுக்கப்பட்டன. அது குறித்து இப்போதுதான் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அபே பெக்லி என்ற பெண்ணுக்கு ‘டெலாசியா குலோசா’ என்ற அரிய வகை நோய் தாக்கியது. பொதுவாக இந்நோய் அமெரிக்காவின் வட பகுதியில் உள்ள கால்நடைகளைத் தாக்கும் கண் நோயாகும். இந்நோய் இதற்கு முன்னதாக மனிதர்களைத் தாக்கியதில்லை. இதுவே முதன்முறையாகும் எனவும் விஞ்ஞானிகள் கூறினர்.

ஆரிகானில் உள்ள கோல்டு கடற்கரை பகுதிக்கு சென்ற அபே பெக்லி குதிரையேற்றம் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அங்கிருந்து ஊர் திரும்பிய அபேவுக்கு ஒரே வாரத்துக்குப் பின்னர் இடது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கண்ணில் புழு ஒன்று நெளிவதைக் கண்டு அவர் அதிர்ந்துள்ளார். அந்தப் புழுவை அவரே வெளியே அகற்றியுள்ளார். ஒரு இன்ச் நீளத்துக்கு அந்தப் புழு இருந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில புழுக்கள் அவர் கண்ணில் இருந்து வெளியேறியுள்ளன. பின்னர், மருத்துவர்கள் அவர் கண்ணில் இருந்து மொத்தமாக 14 புழுக்களை அகற்றினர். அதன் பின்னர் இதுவரை அவர் கண்ணில் எந்தப் புழுவும் வரவில்லை.

இவ்வகை புழுக்கள் கண்ணில் உள்ள ஈரத்தன்மையைப் பயன்படுத்தி வளரக்கூடியது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வகை புழுக்கள் மாட்டு தொழுவங்களில் உள்ள ஒருவகை ஈக்கள் மூலம் பரவும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அபே பெக்லி சுற்றுலா சென்ற கடற்கரைக்கு அருகாமையில் ஒரு தொழுவமும் இருந்துள்ளது. அங்கிருந்தே அந்த அரியவகை நோய் அவருக்கு பரவியிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

LEAVE A REPLY