ரூ.2 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்திய சீக்கிய குருதுவாராக்கள்: இலவச உணவு அளிப்பதில் அதிகரிக்கும் செலவு

0
14

ரூ.2 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்திய சீக்கிய குருதுவாராக்கள், பக்தர்களுக்கு இலவச உணவுகளை தொடர்ந்து வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

சீக்கியர்களின் குருதுவாராக்களால் நடத்தப்படும் லாங்கர் எனப்படும் சமுதாய சமையல் கூடத்தில் தேவைப்படும் சமையல் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.

பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சீக்கிய கோயில்களையும், குருதுவாராக்களையும் சிரோமனி குருதுவாரா பிரபன்தக் குழு நிர்வாகித்து வருகிறது. குருதுவாராக்களுக்கு வரும் பக்தர்களுக்கு இங்குள்ள சமையல் கூடம் மூலம்இலவசமாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் ஒரு லட்சம் பக்தர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இங்குள்ள லாங்கர் எனப்படும் சமுதாய சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமையலுக்கு தேவைப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் இதுவரை ரூ.2 கோடிவரை வரி செலுத்தப்பட்டுள்ளதாக குருதுவாரா அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து சிரோமனி குருதுவாரா பிரபன்தக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தில்ஜித் சிங் பேடி கூறுகையில், “கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்து சமையல் கூடத்துக்கு தேவையான சமையல்பொருட்களை வாங்குவதற்காக மட்டும் ரூ.2 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளோம்.

டன் கணக்கில் கோதுமை மாவு, நெய், பருப்பு வகைகள், காய்கறிகள், பால், சர்க்கரை, அரிசி, சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆகியவை வாங்கும்போது ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியால் அதிகரிக்கும் செலவு குறைக்க வேண்டி லாங்கர் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பல முறை கடிதம் எழுதிவிட்டோம். ஆனால், இன்னும் வரிவிலக்கு அளிக்கவில்லை “ எனத் தெரிவித்தார்.

ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, “ ஜிஎஸ்டி வரியில் இருந்து, எந்தவிதமான குருதுவாரக்களுக்கும், லாங்கர்களுக்கும் வரிவிலக்கு அளிக்க முடியாது” என திட்டவட்டமாகத் தெரிவித்தது சீக்கியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலும், லாங்கர் சமையல்கூட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கக் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால், மத்தியஅரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.

இதனால், பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் சீக்கியர்களின் லாங்கர் சமையல் கூடத்துக்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சீக்கியர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

LEAVE A REPLY