புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மாறிய திமுக ஆய்வுக் கூட்டம்: ஸ்டாலினுடன் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

0
30

திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி யின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வரும் ஆய்வுக் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலினுடன் நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கடந்த 1-ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி கோவை மாநகர் வடக்கு, தெற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். 3-ம் தேதி கோவை வடக்கு, தெற்கு, 7-ம் தேதி ஈரோடு வடக்கு, தெற்கு, 8-ம் தேதி திருப்பூர் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகளுடன் கட்சி யின் செயல்பாடுகள் பற்றி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பெரும்பாலான நிர்வாகி கள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் பெரும் நிதியை செலவழித்து கட்சியை நடத்த, தாங்கள் படும் சிரமங்களை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனால், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “கட்சியில் பிரச்சினைகள் இருப்பதை நான் அறிவேன். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தனிப்பட்ட விரோதம், பிறரின் தூண்டுதல் காரணமாக பொய்ப்புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித் தார்.

முதல் 4 நாட்கள் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திலும் ஒரே மாதிரி யான புகார்கள் குவிந்ததால் நேற்று நடந்த சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்பு காத்திருப்பு அறையில் இருந்தவர்களுக்கு திமுகவின் வரலாறு, எதிர்கொண்ட சோதனைகள், 100 ஆண்டுகால திராவிட இயக்கத்தின் வரலாறு அடங்கிய 30 நிமிட வீடியோ காண்பிக்கப் பட்டது.

முதல் 4 நாட்களும் நிர்வாகிகளின் புகார்கள், குறைகளை கேட்டு அதற்கு ஸ்டாலின் பதிலளித்து வந்தார். ஆனால் நேற்று சில நிமிடங்கள் மட்டுமே அவர் பேசினார். அப்போது, “அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் பணியைத் தொடங்குங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனால் நிர்வாகிகளுடான ஆய்வுக் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மாறியது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் அனைவரும் விரும்பி கேட்டுக் கொண்டதால் அவர்களுடன் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்” என்றார்.

இதுபற்றி திமுக தொண்டர்கள் சிலர் கூறும்போது, “நிர்வாகிகள் மீது பெருமளவில் புகார்கள் குவியும்போது, அவற்றில் பொய்ப் புகார்களும் இருக்கத்தான் செய்யும். உரிய விசாரணைகள் மூலம் பொய்ப் புகார்களை அடையாளம் கண்டு ஒதுக்கி விடலாம். அதே நேரத்தில் உண்மையான புகார்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால்தான், விசுவாசமான தொண்டர்களிடம் நம்பிக்கை பெருகும். ஆகவே, புகைப்பட நிகழ்வுகளுக்கான நேரத்தை குறைத்து கட்சி அமைப்புகளின் செயல்பாடு கள் தொடர்பான ஆய்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்” என்றனர்.

“கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதுபோல ஸ்டாலின் கூட்டிய திமுகவினரின் ஆய்வுக் கூட்டமும், வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக முடிந்துவிடக் கூடாது. செயல் தலைவருடன் குழு புகைப்படம் எடுப்பதில் தொண்டர்களுக்கு ஆசைதான். எனினும் அதைவிட கட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், உண்மையான நிலை பற்றி கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பைதான் தொண்டர்கள் விரும்புகின்றனர்” என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY