மாவட்டச் செயலாளர்களையே குறிவைக்கும் திமுக நிர்வாகிகள்: புகாரில் உண்மை இல்லை என்றால் நடவடிக்கை என ஸ்டாலின் எச்சரிக்கை

0
81

மாவட்டச் செயலாளர்களை குறிவைத்து கீழ்மட்ட நிர்வாகிகள் புகார் அளித்து வருவது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புகாரில் உண்மை இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகளை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் அவர் நேரில் சந்தித்து குறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.

4-வது நாளாக நேற்று காலையில் திருப்பூர் வடக்கு, மாலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார். 4 நாட்களாக நடந்த ஆய்வில் மாவட்டச் செயலாளர்கள் மீதே அதிகமான புகார்கள் குவிந்துள்ளன. ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் குவியும் மனுக்களில் பெரும்பாலானவை மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களாகவே உள்ளன.

இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது அவர்கள், ‘‘கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் கட்சியை நடத்துவதே சிரமமாக உள்ளது. கட்சி அலுவலகம், அன்றாடச் செலவுகள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், தலைவர்கள் பிறந்த நாள் விழா என பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. ஆனால், எதையும் செய்யாதவர்கள் குறை சொல்கின்றனர்’’ என வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘‘மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குறைகள் இருப்பதை நான் அறிவேன். அது கட்சிக்கு பாதகமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட விரோதம் காரணமாகவோ, பிறரின் தூண்டுதலின் காரணமாக பொய்யான புகார்கள் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். நீங்கள் யார் மீது புகார் மனு அளித்தீர்களோ அந்த மனு சம்பந்தப்பட்டவருக்கு செல்லாது. அதேநேரத்தில் புகாரில் உண்மை இல்லை என்றால் புகார் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் கூறும்போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த இரு நாட்களாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை ஸ்டாலின் சமாதானப்படுத்தி பிரச்சினைகளை பெரிதுப்படுத்தாமல் வரும் தேர்தல்களில் வெற்றி பெற உழைக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY